எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது

மாலை வணக்கம் ---

தீதும் நன்றம் பிறர்தர வாரா

சமூகக் குற்றங்களைக் களைவோம்

டிஜிட்டலுக்கு மாறும் உலகம்

இனி எல்லாமே டிஜிட்டல் உலகம் தான். அதில் நாம் முன்னேறுவதைக் குறித்து யோசிப்போம்.

நல்லதை செய்வோம் அதை இன்றே செய்வோம்

Saturday, January 29, 2011

நற்பணி தொடர வேண்டும்!

ரொம்ப நாளா ஒரு விஷயம் சொல்லணும்னு ஆசை. நான் ஊர்ல இருக்கும்போது 'மக்கள் நலக்குழு' னு ஒரு அமைப்பை தொடங்கினேன். இதுக்கு தலைவர், செயலாளர்னு எந்த பொறுப்பும் கிடையாது. அமைப்பாளரா நான் இருந்தேன். ஏன்னா ஒருங்கிணைக்கிறதுக்கு ஒரு ஆள் வேணுமே, அதனால்தான். கல்லூரிப்படிப்பை முடிச்சிட்டு ஊர்ல இருக்கும்போது தொடங்கினேன். இதுல இருந்தவங்கள்ல எல்லாருமே பத்து, பனிரெண்டு படிச்சிட்டிருந்த ஸ்டூடன்ட்ஸ்தான். எங்களோட வேலை எல்லாமே லீவு நாள்லதான் நடக்கும். என்ன வேலைன்னா... எங்க ஊர்ல வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஓடுது. அதுக்கு போற வழி ரொம்ப மோசமா இருக்கும். (இப்ப ரோடு போட்டுட்டாங்க). மழை நேரத்துல பள்ளமும் மேடுமா இருக்கும், அதில சகதி நிறைஞ்சு கிடக்கும். அதுமட்டுமில்லாம முள் செடி வழியை மறைச்சி கிடக்கும். இதையெல்லாம் சரி பண்றதுதான் எங்களோட வேலை. பிறகு ரோட்டோரமா மரக்கன்றுகளை நடுவோம். மரக்கன்றுகள் எல்லாமே பஞ்சாயத்து யூனியன்ல இலவசமாவே கிடைக்கும். அதை வாங்கிட்டு வந்து நடுவோம். வெயில் நேரத்துல தண்ணீர் பந்தல் வைப்போம். தெருவிளக்கு எரியலைன்னா பஞ்சாயத்து ஆபீஸ்ல போய் சொல்வோம், மறுநாளே லைட் எரியும். தெருநாடகங்கள் போடுவோம். அறிவொளி இயக்கத்துல சேர்ந்து ஊர் ஊரா போய் நாடகங்கள் போட்டோம். இதனால‌ மக்கள் மத்தியில நல்ல பெயர் எடுத்தோம்.  ஆனாலும் சிலர் இதைக்கண்டு பொறுக்காமல் விமர்சித்தனர். அதேநேரத்தில் அரசியல்வாதிகள் சிலர் எங்களோடு நெருங்கி பழக தொடங்கினர். தங்களுக்கு ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். நல்லதொரு அமைப்பாக உருவாக்கும் திட்டம் இருந்தது. ஆனால் காலச்சூழல் அதன்பிறகு படிப்பு, வேலை என்று எங்களை திசைக்கு ஒரு பக்கமாக அனுப்பிவிட்டது. ஆனாலும் மனதில் ஏக்கம் நிறைந்திருக்கிறது. என்றைக்காவது ஒருநாள் விட்ட பணியை தொடர வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கிறது. நேரம் காலம் வாய்க்கும்போது பணியை தொடர வேண்டும். நல்ல உள்ளங்களின் ஆதரவு தேவை. எதிர்பார்ப்புடன்...    

Friday, January 28, 2011

விடுதலை! விடுதலை! மூட்டுவலிக்கு விடுதலை!

சில நாளா எதுவுமே எழுதறது இல்லை. நேரமில்லைனு ரொம்ப சிம்பிளா சொல்லிட்டு போயிற‌லாம். ஆனாலும் அதுல உடன்பாடில்லை. வைத்திய தகவல்கள் சொல்லி கொஞ்சநாள் ஆகிட்டு. பெரியவர் ஒருத்தர் மூட்டுவலின்னு வந்தார். ரொம்பநாளாவே விசாரிச்சிட்டு இருந்திருக்கார். அவருக்கு நேரமில்லையாம். குடியரசு தினத்துக்கு முந்தினநாள்தான் எங்கவீட்டுக்கு வந்திருக்கார். மறுநாள் அவருக்கு ஒரு எண்ணெய் தயார் பண்ணி குடுத்தேன். கூடவே பச்சிலை ஒன்றை மூட்டுவலி உள்ள இடத்தில் 3 நாட்கள்தான் பூசி விட்டேன். 4 வருஷமா இருந்த வலி மூணே நாள்ல குறைஞ்சிருக்குனு சொன்னார். வலி வரும்போதெல்லாம் டாக்டர்கிட்ட போய் ஊசி போட்டுட்டு வருவாராம். மனுஷனுக்கு இப்பதான் நிம்மதியாம். அந்த மூட்டுவலியால‌ அவர் என்ன பாடுபட்டிருப்பார். வைத்தியத்தை தொடரணும்னு அவருக்கு ஆசை இருக்குறதால இனிமேல் பிரச்சினை இல்லை. கூடவே அவருக்கு சளித்தொல்லை இருக்குனு சொன்னார். பச்சிலை ஒன்றை தேனுடன் கலந்து சாப்பிடச்சொன்னேன். ரெண்டே நாள்ல தும்மல் போடுற‌து குறைஞ்சிருக்குனு சொன்னார். இந்த வைத்தியம் எல்லாமே எனக்கு கைமேல் கிடைத்த பலனாகத்தான் கருதுகிறேன். ஏன்னு சொன்னா, நோய் நொடிகளால மக்கள் படுற கஷ்டங்களையும், அதுக்காக காசு பணத்தை கொட்டியும் நிவாரணம் கிடைக்காம அவதிப்படுறதயும் பார்த்து மனசு ரொம்பவே கஷ்டமா இருக்கு. எல்லோருக்கும் முடிய்லைன்னாலும் நம்மால் முடிஞ்சவங்களுக்கு வைத்தியம் செய்யணும். அதுக்கு அந்த ஆண்டவன்தான் கருணை காட்டணும்.

Monday, January 24, 2011

கொஞ்சம் விழித்தெழுங்கள்!

வணக்கம். 23.01.2011 ஞாயிற்றுக்கிழமை மதுரையில் என் உறவினர் வீட்டு திருமணம். சனிக்கிழமை ராத்திரி 9 மணிக்கு கோயம்பேட்டுல பஸ் ஏறி மறுநாள் காலைல 8.30 மணிக்கெல்லாம் மதுரை போய்ச்சேர்ந்தேன். போற வழியில சென்னை டூ  திருச்சிக்கு போன பஸ்சுல சுந்தர்.சி நடிச்ச‌ 'வாடா' படம் பார்த்தேன். அரைகுறை தூக்கத்தோட பார்த்தேன். கலெக்டர் வேடம் ஏற்று நடித்த சுந்தர்.சி அநியாயக்காரர்களை சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்குகிறார். அதேபோல் திருச்சி டூ மதுரை சென்ற‌ பஸ்சில் சூர்யாவோட சிங்கம் படம் பார்த்தேன். எஸ்.ஐ. யான சூர்யா தனி ஆளாக நின்று ரவுடிகளை  பந்தாடுவார். பார்க்கும்போது உணர்ச்சிவசப்பட்டேன். ஆனால் நிஜத்தில் அவர்களால் என்ன முடியும் என்று எல்லோருக்கும் தெரிந்த கதையே. அவர்களது மறுபக்கமும். குணாதிசயங்களும் வேறுமாதிரியாகவே இருக்கின்றன. காசைக்குடுத்துட்டு ஒரு சில மணி நேரங்கள் கற்பனை உலகில் வாழ்ந்துவிட்டு நாமும் பழையபடி அவரவர் வேலையை செய்துகொண்டிருக்கிறோம்.
இந்தியன் கமல், ரமணா விஜயகாந்த், முதல்வன் அர்ஜூன், அந்நியன் விக்ரம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்களெல்லாம் நடிகர்கள், ஏதோ நடித்துவிட்டுப்போனார்கள் அவ்வளவுதானே? ஆனால் இப்போது நம்ம அண்ணன் விஜயகாந்த் அரசியல்ல குதிச்சிருக்கார். வரவேற்கலாம், ஆனால் ஆரம்பமே ஆட்டம் காணுதே... ரவுடிகளும், மெஜாரிட்டி சாதியைச்சேர்ந்தவர்களே பெரும்பாலும் அவரது கட்சியில் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி நல்லாட்சி நடத்துவார்கள். விஜயகாந்த் சிந்திக்க வேண்டும். நான் இங்கே சொல்லும் கருத்து நிச்சயம் அவரை எட்டப்போவதில்லை, ஆனால் அரசல் புரசலாக எனது இதே கருத்தை ஏற்கனவே பலர் வேறு வேறு தளங்களில் சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்ததாக. விஜயகாந்த் ஒரு சுத்த தமிழன் அல்ல. அவர் சார்ந்த சாதியின் அடிப்படையில் பார்த்தால் அவரது தாய்மொழி தெலுங்கு. இதை நம் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை. ஆனால் ஆரம்பமே சரியில்லை என்றால் தாக்குப்பிடிப்பது எப்படி? இது ஒரு தனிக்கதை.
அநீதிகளை தட்டிக்கேட்கும் மனப்பக்குவம் ஏன் நம்மில் பெரும்பாலானோருக்கு இல்லை. சிங்கம் சூர்யாவைப்போல, சாமி விக்ரமைப்போல எத்தனைபேர் இருக்கிறார்கள். விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் தொடருவதில்லை. பல்வேறு தரப்புகளில் இருந்து மிரட்டல்கள் வரும்போது ஒதுங்கிக்கொள்கிறார்கள். அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாக மாறி அவர்கள் தங்களை பொருளாதாரத்தில் வளப்படுத்திக்கொள்கிறார்கள். சிலர் மட்டும்  மவுனிகளாக இருந்துவிடுகிறார்கள்.
பொதுவாகவே தவறுகளை தட்டிக்கேட்கும் மனப்பாங்கு நம்மில் பெரும்பாலானோருக்கு இல்லாததால்தான் ஆளாளுக்கு ஆட்டம் போடுகிறார்கள். காய்கறி விலையும் பெட்ரோல் விலையும் தாறுமாறாக ஏறிக்கொண்டே போகிறது. பெயருக்கு சில அரசியல்வா(வியா)திகள் அறிக்கை விடுகிறார்கள் அவ்வளவுதான். எத்தனை அமைப்புகள் இருக்கின்றன. ஏன் யாருக்குமே போராட்டக்குணம் இல்லாமல் போனது? மேடைகளில் வாய் கிழிய பேசுவோர் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இந்த  விண்ணை முட்டும் விலைவாசி ஏற்றம் நாளை ஒருநாள் இங்கேயும் சோமாலியக்குழந்தைகள் உருவாகும் வாய்ப்பு ஏற்படலாம். அப்படியொரு நிலை வர காரணமாக இருந்து விடுகிறார்கள்.  என் கல்லூரிப்படிப்பை முடித்ததும் என் கிராமத்தில் நான் ஒரு அமைப்பை தொடங்கினேன். அதுபற்றி அடுத்த சந்திப்பில் சொல்கிறேன்.

Thursday, January 20, 2011

வாகன ஓட்டிகளே கொஞ்சம் யோசிங்க!

20.01.2011 காலை சுமார் 9.30 மணி இருக்கும். நான் வசிக்கும் மாதவரம் பகுதியில் இருந்து மூலக்கடை வழியாக அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். மூலக்கடைக்கு முன்னால் சில அடி தூரத்தில்.... குட்டியானை என்று சொல்லப்படும் டாடா ஏஸ் வாகனம் பிரேக் போட்டதால் பின்னால் சென்ற ஆட்டோ மோதி (ஆட்டோவின்) முன்புறம் பழுதானதோடு டிரைவருக்கு காலில் அடி. அதற்கு பின்னால் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணும் மோதி அவருக்கும் காலில் காயம்.  ஆட்டோ டிரைவர் சின்னக்குழந்தை மாதிரி தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார். காலில் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்க‌லாம் என்ற பயம் அவருக்கு. இங்கே யாரை குற்றம் சொல்லவென்று தெரியவில்லை.
இன்றைய அவசர யுகத்தில் எல்லாமே அவசரம்தான். அதுவும் வாகன ஓட்டிகளை கேட்கவே வேண்டாம். அத்துதான் கழுதை எடுத்ததாம் ஓட்டம்னு கிராமத்துல சொல்வாங்க. அதுமாதிரி அவனவன் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடுறான். அதுவும் சென்னை மாதிரி நகரங்களில் கேட்கவே வேண்டாம். யாரையும், எந்த விதிகளையும் எவரும் மதிப்பதில்லை. சிக்னலில் பச்சை விளக்கு எரிவதற்காக காத்திருக்கும்வேளையில் மஞ்சள் விளக்கு எரிவதற்குள்ளாக பின்னால் நிற்பவர்கள் 'பீய்ங்... பீய்ங்...'  என்று ஹாரன் எழுப்புகின்றனர். அந்தவேளையில், 'எங்கதான் போறானுங்களோ... சனியன் புடுச்சவனுங்க...' என்று பெரியவர்கள் முணுமுணுக்க தவறுவதில்லை. ரோட்டுல போய்க்கிட்டு இருக்கும்போதே 'ஓவர்டேக்' செய்கிறவர்கள் ஏராளம். அப்போது பலரை நிலைகுலைய செய்துவிட்டு செல்கிறார்கள். குதிரைத்திறன் குறைந்தவர்கள் முன்னால் சென்றால் போதும் பெரிய வண்டிகள் வைத்திருப்போருக்கு ஏதோ அவமரியாதை ஏற்பட்டுவிட்டதுபோல சர்ரென்று முந்திச்செல்கிறார்கள். இதில் இளைஞர்கள் மட்டுமல்ல, தலைநரைத்தவர் முதல் மீசை முளைக்காதது, ஆம்பிளைக்கு போட்டியா பொம்பளைன்னு எல்லோருமே ஏகத்துக்கு வண்டி ஓட்டுறாங்க. மற்றவர்களைப்பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் சர்...புர்ன்னு போறாங்க.  அரக்க பரக்க, அவசர அவசரமா போய் வாழ்க்கையும் அவசரமா முடிஞ்சுபோகுது. ஆமாங்க வயித்தெரிச்சல் இருக்காதா? என்ன..? சென்னையில் கடந்த ஆண்டு சாலைவிபத்தில் இறந்தவர்களில் இளைஞர்களே அதிகம் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. படிச்சா மட்டும் போதாதுங்க.... கொஞ்சமாவது பொது அறிவு வேணும், மத்தவங்களோட உணர்ச்சிகளை புரிஞ்சிக்கணும், உயிர்மேல கொஞ்சமாவது பயம் வேணும். கொஞ்சம் யோசிங்கப்பா... பெத்தவங்க, பொண்டாட்டி புள்ளைங்க வீட்டுல காத்திட்டு இருக்காங்க...

Wednesday, January 19, 2011

தொப்பையை குறைக்கும் கொள்ளு!

எனக்குத்தெரிஞ்ச ஆட்டோ டிரைவர் ஒருத்தர், தனது தொப்பையை குறைக்க வழி கேட்டார். நான் ஒரு வைத்தியன் என்பது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் எனது வைத்திய அனுபவம் பற்றி சொன்னேன். சரி மருந்து கொடுங்க என்று கேட்டார். நான் செய்யும் வைத்தியம் ஒன்றும் மூடு மந்திரம் இல்லை. அந்தக்கால வைத்தியர்கள் பிறருக்கு வைத்தியம் பற்றி சொல்லாமலே விட்டுப்போனதால்தான் நமது வைத்தியம் வெளியே தெரியாமல் இருந்துவிட்டது என்பார்கள். அதற்காக நாமும் அப்படி இருக்கப்போவதில்லை. கீழே வழிமுறைகளை சொல்கிறேன், பார்த்து படித்து பலன்பெறுங்கள்.
உடல்பருமன், தொப்பை, தேவையற்ற கொழுப்பு போன்றவற்றை குறைக்க வேண்டுமானால் இருக்கவே இருக்கிறது கொள்ளு. இதனுடன் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய இந்துப்பை சேர்த்து நீரில் வேக வைத்து அதன் சாறை மாலை வேளைகளில் அருந்திவந்தால் படிப்படியாக குறையும். இதைத்தான் அந்த டிரைவருக்கு கொடுத்தேன். கூடவே இன்னும் சில மருந்துகளையும் கொடுத்தேன். ஆறே நாளில் ரிசல்ட் கிடைத்ததாக சொன்னார். முன்னாடியெல்லாம் நின்று குனிந்து பார்த்தால் அவரது கால்விரல் நகம் தெரியாதாம். கொள்ளு சாப்பிட்ட பிறகு கால்விரல் நகம் தெரிவதாக கூறினார். கூடவே சாப்பிடும்போது சோத்துப்பருக்கைகள் கீழே விழுமாம் (தொந்தி இடிப்பதால்). இப்போது கீழே சோறு விழாமல் சாப்பிடுகிறேன் என்றார். நல்ல ரிசல்ட்தானே? செய்து பாருங்க (பருமனானவர்கள்). குதிரை மாதிரி சும்மா கும்முனு இருக்கலாம்.

Thursday, January 13, 2011

வாயில்லா ஜீவன்கள் வாழ வழி உண்டா?

நண்பர் ஒருத்தர் என்கிட்ட வந்து, 'அண்ணன் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர்  மனைவியை விட்டு பிரிஞ்சு வாழ்ந்தார். குடிச்சு குடிச்சே இறந்திட்டாரு, பாவம். அவரோட‌ மூணு குழந்தைகளை பராமரிக்க ஆள் இல்லை. எதாவது அனாதை இல்லம் இருந்தா சொல்லுங்க'ன்னு சொன்னார். (என்னோட சம்பாத்தியம்னா இதுமாதிரி அனாதை இல்லங்கள், மற்றவர்க்கு உதவும் நல்ல மனிதர்கள்தான்.)
சரி சொல்றேன்னு சொன்னேன். அந்த ஹோம்ல பர்மிஷன் வாங்கிட்டு சொல்லிட்டேன். சென்னை கொட்டிவாக்கத்தில் அன்புக்கரங்கள் என்னும் அந்த இல்லத்தை லஷ்மி என்ற மேடம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு உறுதுணையாக சுரேஷ்குமார் என்பவர் இருந்து வருகிறார். இந்த இல்லத்துக்கு நான் பலமுறை சென்றிருக்கிறேன். அங்கே இருக்கும் ஒரு முதிய பெண்மணி நான் சென்றால் போதும், மிகுந்த பாசத்தோடு வரவேற்பார். இந்த இல்லத்தைப்பற்றி பல‌முறை பத்திரிகைகளில் எழுதியுள்ளேன். இதனால் என்மேல் அவர்களுக்கு கொஞ்சம் மரியாதை உண்டு. ஆக, அந்த குழந்தைகளை சேர்க்கும் பணி நடந்து வருகிறது.எதற்காக இதை இங்கே சொன்னேன் என்றால் நிர்க்கதியான மனிதர்களை சேர்க்க இல்லங்கள் இருக்கின்றன, ஆனால்நிர்க்கதியான வாயில்லா ஜீவன்களை பாதுகாக்க சரியான இல்லங்கள் இல்லாதது வேதனையளிக்கிறது.
என் மனதை பாதித்த சம்பவங்கள் இரண்டை இங்கே கூற விரும்புகிறேன்.  நான் வசிக்கும் பகுதியில் ஒரு நாய் 7 குட்டிகள் போட்டது. ஆனால் அவற்றின் தாய் எலும்பும், தோலுமாக காட்சியளிக்கிறது. இந்த சூழலில் அந்த நாய்களை பாதுகாக்கும் நோக்கத்தில் ப்ளூ கிராஸ் அமைப்பை தொடர்பு கொண்டேன். அவர்கள் கேட்ட கேள்வி நாய் குட்டி போட்டு 45 நாள் ஆகியிருக்கணும், அப்படியானால்தான் சேர்த்துக்கொள்வோம் என்றார்கள். இதனால் அந்த நாய்க்குட்டிகளை சேர்க்க முடியாமல்போனது. 10, 15நாள்களே நாய்க்குட்டிகள் அவை, பனி நேரம் என்பதால் அவை ஒவ்வொன்றாய் செத்துப்போயின. தினம் தினம் என் மனம் அதை நினைத்து கஷ்டப்படுகிறது. குற்றவாளிபோல் மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது.
கடந்த ஆண்டு இதே பனிக்காலம். நான் வசிக்கும் பகுதியில் நாய்க்குட்டி ஒன்றை யாரோ விட்டு விட்டு சென்றுவிட்டனர். அது அந்தப்பகுதியில் உள்ள கடை முன்னே தஞ்சம் புகுந்தது. கடைக்கு வருவோர், போவோர் பிஸ்கட், புரை என்று வாங்கிப்போடுவார்கள். அதை தின்று வளர்ந்தது. 3, 4 மாதங்கள் தாக்குப்பிடித்தது. ஒருநாள் ராத்திரிவேளையில் யாரோ டூவீலர் ஆசாமி அந்த வாயில்லா ஜீவனின் மீது மோதிச்சென்றுவிட்டார். இரவு முழுக்க வீல், வீல் என்று சத்தம். நான் வேறு எதோ நாய் கத்துகிறது என்று இருந்துவிட்டேன். காலையில் பார்த்தால், அந்த நாய்க்குட்டி. நகர முடியாமல் அங்குமிங்கும் உருண்டு புரண்டு சென்றது. உடம்பெல்லாம் மண். தண்ணீர் விட்டு கழுவினேன், சாப்பாடு வைத்தேன். ஆனால் அது சாப்பிடாமல் பசுவைத்தேடும் கன்றைப்போல் என்னிடம் வந்தது. என்னால் என்ன செய்ய முடியும். ப்ளூ கிராஸுக்கு போன் பண்ணினேன். வருகிறேன் என்றார்கள், நேரம் ஆனதால் நான் வேலைக்கு கிளம்பிவிட்டேன், கடைசியில் நண்பகல் 12 மணிக்கு போன் பண்ணி நாங்க அண்ணாநகர்கிட்ட வந்துட்டிருக்கோம், நாய் இருக்கா எப்பிடி? என்றார்கள். அதற்குள் வீட்டிலிருந்து எனக்கு தகவல் நாய் 11 மணி அளவில் செத்துவிட்டது, குப்பை அள்ளுகிறவர்கள் அந்த நேரம் வந்தார்கள். எடுத்துச்சென்றுவிட்டார்கள் என்று தகவல் வந்தது.
என்ன சொல்ல? நாய் செத்துவிட்டது என்றேன். வாயில்லா ஜீவன்களை காப்பாற்ற வழி இல்லையா? இருந்தால் சொல்லுங்கள், சேர்ந்து நற்பணியாற்றுவோம்.

Tuesday, January 11, 2011

வாயை மூடிய அதிகாரம்!

10.1.11 திங்கட்கிழமை எனக்கு நடந்த ஒரு நிகழ்வு. அதிகாரம் இருந்தால்தான் இந்த உலகில் பிழைக்கமுடியும் என்பதற்கு இந்த நிகழ்வை ஒரு சாட்சியாக நினைக்கிறேன். இந்த விஷயத்தில் என்மீது தவறு இருந்தால் என்னை மன்னித்தருள்க!
பெரம்பூர் ரெயில்நிலைத்திலிருந்து மாதவரம் நெடுஞ்சாலை வழியாக செல்லும் பாதை எப்போதும் நெரிசல் நிறைந்ததாகவே இருக்கும்.நான் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் வழி இதுதான். நேற்று செல்லும்போது அந்த சாலையில் உள்ள‌ நாட்டு மருந்துக்கடையில் சில பொருட்கள் வாங்குவதற்காக எனது டூ வீலரை நிறுத்தினேன். அப்போது அந்தக்கடையின் முன்புறம் (சாலையோரம்) கடை விரித்திருந்த காய்கறி வியாபாரி,' உள்ள போ, உள்ள போ...' என்று சத்தம் போட்டார். பக்கத்தில் மார்க்கெட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நான் வண்டியை விட்டு இறங்குவதற்குள் அவர் போட்ட சத்தம் என்னை எரிச்சல்படுத்தியது. வண்டியை விட்டு இறங்குறதுக்குள்ள சத்தம் போடுறீங்களே... இருங்க நான் ஓரமா நிறுத்துறேன் என்று நான் சொல்ல, அவர் அதை கண்டுகொள்ளாமல் வாய்க்கு வந்தபடி பேசினார். நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன், முடியவில்லை. ஹலோ நான் சாமான் வாங்குற கடை இதுதான், இங்கதான் வண்டியை நிறுத்துவேன் என்றேன். அவர் அதிகமாக பேசவே, பக்கத்தில் போய் நீ சொல்றத‌ கேட்டுட்டு போறதுக்கு நான் ஒண்ணும் இளிச்சவாயன் இல்ல, நான் பத்திரிக்கைகாரன் என்றேன். அவ்வளவுதான் 'கப்சிப்' என்று அவர் பேச்சை நிறுத்திவிட்டார். நான் ஏன் அப்ப‌டி சொன்னேன்னா, இதேபோல பலதடவை வண்டியை நிறுத்தும்போது அந்த ஆள் சத்தம் போட்டிருக்கிறார் என்பதால் என் பொறுமை எல்லை மீறிவிட்டது.
இங்கே நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது என்னவென்றால், சாமானியன் என்றால் அவனை தரங்கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்து விடுவார்களாம். இதை அந்த நாட்டு மருந்து கடைக்காரரே சொன்னார். 'இது என்னங்க இங்க வ‌ண்டி நிறுத்துறவங்கள இவனுங்க கேக்குற கேள்வியால அவமானப்பட்டு போறாங்க' என்றார். அதாவது சட்டத்துக்கு புறம்பாக அவர் கடை விரித்திருப்பதோடு என்னை தேவையில்லாமல் சத்தம் போட்டதுதான் எரிச்சலூட்டியது. அதுமட்டுமல்ல அந்த மார்க்கெட்டின் உள்ளே வெட்டியாக நின்று கொண்டிருந்த ரெண்டு பெருசுகளும் அவருக்கு துணையாக வந்தார்கள். அவர்களிடம், எனக்கும் இவருக்கும்தான் பேச்சு, இதுல தலையிட நீங்க யாருனு கேட்டேன். யார்யாரெல்லாமோ பேச வந்துட்டாங்க என்றேன் (இந்த வார்த்தையைத்தான் பேசினேன், ஏனென்றால் அவர்கள் சுமார் 60 வயதுக்குட்பட்டவ‌ர்கள்) உடனே ஒருவர் நான்என்ன உங்க வீட்டுல மாடு மேய்க்கிறவனா? என்று சம்பந்தமில்லாமல் பேசினார். அதன்பிறகு அவர்களாகவே பேச்சை குறைத்துக்கொண்டார்கள். வாய் உள்ள பிள்ளைதான் பொழைக்கும் என்பார்கள், அதோடு அதிகாரமா பேச முடிந்ததால்தான் நான் அவர்களிடமிருந்து தப்ப முடிந்தது, சாமானியர்களை அவர்கள் உண்டு இல்லைனு ஆக்கிடுவாங்கனு கேட்டபோது மனசுக்கு கஷ்டமா இருந்திச்சி. இந்த தேசத்துல, நம்ம தமிழகத்துல இதுமாதிரி நிலைமைகள் நீடிக்க விடக்கூடாது.

Monday, January 10, 2011

வாய்ப்புண்ணா? வயித்துப்புண்ணா?

9‍ ந்தேதி (9.1.2011) சென்னை பச்சையப்பா கல்லூரி எதிரே நடந்த புத்தக கண்காட்சிக்கு குடும்பத்தோடு போயிருந்தேன். வாங்கும் சக்தி இருந்தால் வாங்கிவிடலாம். ஆனாலும் இந்தமுறை எந்தமுறையும் இல்லாத அளவுக்கு புத்தகங்கள் வாங்கினேன் குழந்தைகளுக்கு தேவையான படிப்பு சம்பந்தமான புத்தகங்கள், பொது அறிவு மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன், ஐசக்  நியூட்டன், அப்துல்க‌லாம் போன்றவர்களைப்பற்றி எழுதப்பட்டிருந்த புத்தகங்கள், மூலிகை புத்தகங்கள் போன்றவை வாங்கினோம். மக்கள்கூட்டம் அலைமோதியது, மகிழ்ச்சியான விஷயம். புத்தகம் படிக்கும் பழக்கம் மக்களிடையே இன்னமும் இருப்பது கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது. இது தொடர வேண்டும்.
சரி இன்று வேறொரு வைத்தியம் பற்றி பார்ப்போமா? வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சிகிச்சை எடுத்துக்கொள்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எளிமையான சில வைத்தியங்களை சொல்கிறேன். சிலபேருக்கு இந்த பிரச்சினை இருந்தால் வாய் துர்நாற்றம் வீசும். இப்படிப்பட்டவர்கள் உட்னே செய்ய வேண்டியது நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய மாசிக்காயை வாங்கி சிறிய துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள வேண்டும். பாக்கை மெல்லுவதுபோல் மென்று உமிழ்நீரை விழுங்கினால் வாய்ப்புண், வயிற்றுப்புண் சரியாகி விடும். அதேபோல் சிறிய தேங்காய்த்துண்டை மெல்லுவது, தேங்காயை துருவி நீர் சேர்த்து வாய் கொப்புளிப்பது, அகத்திக்கீரை மற்றும் மணத்தக்காளிக்கீரை சமையல் அல்லது பச்சையாக மென்று சாறை விழுங்குவதன்மூலம் வாய்ப்புண், வயிற்றுப்புண் சரியாகும். அம்மான்பச்சரிசி இலையை பச்சையாக சாப்பிட்டாலும் இந்த பிரச்சினை சரியாகும்.

Thursday, January 6, 2011

கால் ஆணி குணமானது!

சைனஸ், பொடுகு தொல்லைகள் பற்றி எழுதியிருந்தேன். அது எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருந்திருக்குமென்று தெரியவில்லை. மேல் விவரங்களுக்கும், சந்தேகங்களுக்கும் என்னை தொடர்பு கொள்ளலாம். செல்: 9551486617.
இன்று வேறொரு குறைபாட்டையும், அதற்கு நான் எடுத்துக்கொண்ட வைத்தியம் பற்றியும் சொல்கிறேன். கால் ஆணி என்பார்கள். இது வருவதற்கு காரணங்கள் பல உண்டு. இத்தகைய குறைபாடு வந்தால் கிராமப்புறங்களில் ஏதேதோ வைத்தியம் செய்வார்கள். அது படுபயங்கரமாக இருக்கும். என் அப்பாவுக்கு இந்த குறைபாடு வந்தவுடன் பிளேடால் அந்த இடத்தை வெட்டி எடுப்பார். அந்த கையோடு பிளேடால் வெட்டிய அந்த இடத்தில் கருப்பட்டியை (பனைவெல்லம்) வைத்து தீ பற்ற  வைப்பார். அப்போது உயிர் போகுமளவு வலி எடுக்குமாம். இதை பார்க்கும் எனக்கே பயமாக இருக்கும். இதுபோன்ற முரட்டு வைத்தியம் வேண்டாம். எளிய, சுகமான ஒரு வைத்தியம் சொல்கிறேன், கேளுங்கள். இது நானே செய்து பார்த்து, பலனடைந்த‌ வைத்தியமும்கூட‌
அம்மான்பச்சரிசி என்று ஒரு மூலிகை. இது நாம் வசிக்கும் பகுதிகளில் தானாக வளரக்கூடியது. பச்சரிசி போன்ற சுவையுடையது. இதன் தண்டுப்பகுதியை உடைத்தால் பால் வரும். அந்த பாலை கால் ஆணி உள்ள இடத்தில் தடவ வேண்டும். தொடர்ந்து 20 நாட்கள் செய்தேன், கைமேல் பலன் கிடைத்தது. நீங்களும் செய்து பாருங்க. பலனை அனுபவியுங்க. பைசா செலவில்லாமல் எளிய வைத்தியம். இதுமாதிரி வைத்தியங்கள் நிறைய இருக்கிறது.

பொடுகும், சைனஸூம் போயே போச்சு!

வணக்கம். இரண்டாம்நாளாக எனது புதிய பணி தொடர்கிறது. நேற்று (5.1.2011) விட்டதில் இருந்து தொடர நினைக்கிறேன்.. அதற்குமுன் ஒரு தகவலை சொல்ல விரும்புகிறேன். 2011‍ம் ஆண்டு எல்லோருக்கும் வளம் தரும் ஆண்டாக அமையும் என்று சொல்லக்கேட்டேன். அதில் எந்த அளவு உண்மை இருக்கிறதோ தெரியவில்லை. என்னைச்சுற்றி உள்ள சிலருக்கு சில நல்ல செய்திகள் கிடைத்திருக்கின்றன. ஏன், எனக்கும்கூட ஒரு மகிழ்வான நிகழ்வு.
சரி விஷயத்துக்கு வருகிறேன். பொடுகு பிரச்சினை, சைனஸ் தொல்லையை எப்படி எதிர்கொண்டேன் என்பதுபற்றி கூறுகிறேன். எனக்கு ஆங்கில மருத்துவ நண்பர்கள் நிறையபேர் உண்டு என்பதால் என்னென்னவோ சிகிச்சை செய்து பார்த்தேன், பலனில்லை. ஒருவழியாக மூலிகையின் துணையை நாடினேன். முதலில் சைனஸூக்கு வைத்தியம் செய்தேன். ஏனென்றால் பொடுகை ஒழிக்க செய்யும் சிகிச்சை சைனஸை அதிகரிக்கசெய்யும். ஆக, சைனஸுக்கு நொச்சி இலை வைத்தியம் செய்தேன். நொச்சி இலை சாறு எடுத்து அதில் நல்லெண்ணெய் கலந்து நன்றாக கொதிக்க வைத்து சூடு ஆறியதும் பொறுக்கும் சூட்டில் தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் குளித்தேன். வாரத்துக்கு 2 நாள் வீதம் 2 மாதம் செய்தேன். மூக்கடைப்பு விலகி சைனஸ் கொஞ்ச கொஞ்சமாக குணமாயிற்று. ஆனால் தயிர், மோர் சேர்த்தால் எனக்கு ஒத்துக்கொள்ளாது. அதை மட்டும் சேர்த்துக்கொள்வதில்லை. எப்போதாவது சேர்த்துக்கொள்வேன். குளிர்ந்த சூழல் நிலவும்போது தயிர், மோர் சேர்த்துக்கொண்டால் தொண்டை கட்டிக்கொண்டு ஜலதோஷம் பிடிக்கும்.  உடனே சூடாக கொஞ்சம் வென்னீர் (சுடுநீர்) குடித்து அதன் வேகத்தை குறைத்துக்கொள்வேன். மற்றபடி இன்றுவரை சைனஸ் தொல்லை இல்லவே இல்லை.
சைனஸ் போன பிறகு பொடுகை விரட்ட... ஈருள்ளி எனப்படும் சின்ன வெங்காயத்தை அம்மியில் அரைத்தோ, மிக்சியில் அரைத்தோ அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் கலந்து  ஷாம்பு போல் ஆக்கிக்கொண்டு தலைக்கு தேய்த்து அரை மணிநேரம் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்தேன். சில வாரங்களில் பொடுகு போயே போச்சி. அதற்கு முன்பெல்லாம் தலைமுடியை உதறினால் செதில் செதிலாக கொட்டும். சின்ன வெங்காயம், நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கரு சேர்ந்த கலவையில் நல்ல வெற்றி கிடைத்தது. இதை பலருக்கு சொல்லி அவர்களும் வெற்றி கண்டிருக்கிறார்கள். இந்த சிகிச்சை முடி வளரவும் உதவும் என்பது கூடுதல் தகவல்.
நாளை வேறோரு தகவலுடன் சந்திப்போமா?

Wednesday, January 5, 2011

எனது அனுபவம்

மனிதம் புனிதமானது. கிடைத்தற்கரிய ஒரு பிறவி மனிதப்பிறவி. இப்படி ஏதேதோ சொல்வார்கள். இது அவரவர் விருப்பம். ஆனால் மானிடனாய் பிறந்த நாம் இப்புவியில் வாழும் காலத்தில் என்ன செய்கிறோம், மற்றவர்க்கோ மானிடரல்லாத ஏனைய பிறவிகளுக்கோ நம்மால் முடியுமட்டும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தை எனது முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறேன். அதை இன்றளவும் நான் கடைபிடித்தும் வருகிறேன். பொருளாதாரம் மிக முக்கியம் என்பதால் சில பணிகள் தடைபட்டுக்கொண்டே வருகின்றன. இருந்தாலும் நிச்சயம் எனது லட்சியம் வெல்லும் என்ற நம்பிக்கையோடு எனது பணியை தொடர்கிறேன்.

முதலில் நான் சொல்ல விரும்புவது யாதெனில்,இன்றைய சூழல் மிகவும் கேடு கெட்டுப்போய் கிடக்கிறது. சூழல் என்னும்போது நிறையவே சூழல்கள் உள்ளன. எல்லா சூழல்களையும் பின்வரும் நாட்களில் பார்க்கலாம். இங்கே நான் சொல்ல வரும் சூழல் சுற்றுப்புறச்சூழல், அதாவது புவியியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்.  இதன் காரணமாக புதிது புதிதாக நோய்கள். ஏற்கனவே இருக்கும் சில நோய்களுக்கே (ஆங்கில) மருந்து கண்டுபிடிக்கப்படாத‌ சூழலில் இன்றைய புதிய வரவுகள் மக்களை பாடாய்ப்ப‌டுத்தி வருகின்றன. என்ன செய்ய? என்ன சொல்ல? என்று எல்லோருமே கையைப்பிசைந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் எனது அனுபவத்தில் ஒன்றை மட்டும் சொல்ல முடியும். நோய் வரும்முன் காப்பதே சிறந்த வழி. வந்துவிட்டாலும் மூலிகைகளின் துணையோடுஅவற்றை எதிர்கொள்ள முடியும். ஆனால் சில போலி டாக்டர்களைப்போல அதை குணப்படுத்திவிட முடியும், இதை குணப்படுத்திவிட முடியும் என்று நான் சொல்லப்போவதில்லை.
இவை எல்லாமே என் அனுபவத்தில் நான் செய்து பார்த்தவை, என்னைச்சுற்றி இருப்பவர்களுக்கு கொடுத்து பார்த்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறேன்.

10 வருடங்களுக்கு முன் நான் இதே சென்னையில் தங்கியிருந்து எனது பணியை செய்து கொண்டிருந்தேன். அப்போது சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடிய வேளை. நான் தங்கியிருந்த இடத்தில் ஏராளமானோர் இருந்தோம். இதனால் தண்ணீர் தேவை அதிகமாக இருந்தது. நீர் இறைக்கும் மோட்டார் ஓடிக்கொண்டே இருக்கும்.  ஆனால் நேரம் ஆக ஆக தண்ணீரின் நிறம் மாறி விடும். செம்மண் கலந்த நீர் வரும். நாங்களும் வேறு வழியில்லாமல் குளிப்போம். நாளடைவில் எனக்கு பொடுகுப்பிரச்சினை வந்துவிட்டது. கூடவே சைனஸ் தொல்லையும் தொற்றிக்கொண்டது. டாக்டரைப்போய் பார்த்தால் சைனஸ்தான், வேற வழியே இல்லை, ஆபரேஷன்தான் இதுக்கு வழி என்றார்.
சரி முதல்ல பொடுகை விரட்டுவோம்னு ஹெட் அன்ட் ஷோல்டர் ஷாம்பு முதல் டாக்டர்கள் சொன்ன மருந்துகளையெல்லாம் போட்டுப்பார்த்தேன். எந்த பிரயோஜனமும் இல்லை. அப்பதான் எனக்கும் மூலிகைகள்மேல் ஆர்வம் வந்தது. ஏற்கனவே நான் பிறந்த ஊர் கிராமம் என்பதால் வீட்டைச்சுற்றி வளரும் சில மூலிகைகளையும், அவற்றின் குணநலன்களையும் ‌நான் தெரிந்து வைத்திருந்தேன். அது இப்போது எனக்கு கைகொடுத்தது. இதன் காரணமாக எனக்கு நானே செய்து கொண்ட வைத்தியம் பொடுகு மற்றும் சைனஸ் தொல்லைக்காக... இதில் எனக்கு நல்ல வெற்றி கிடைத்தது. என்னென்ன‌ சிகிச்சை மேற்கொண்டேன்,  எப்படி குணமாயிற்று என்ற விவரங்களை இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.

வாருங்கள் வாழ்த்துங்கள்

தமிழ்குமரன் என்ற பெயரில் நான் துவங்கியிருக்கும் இந்த பகுதியில் இன்றைய, அன்றைய நிதர்சனங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள், எளிய முறையில் நோய்களை குணப்படுத்தும் மூலிகை மருத்துவம் பற்றியும் விரிவாக எழுத இருக்கிறேன். இதற்கு அன்பர்களின் மேலான ஒத்துழைப்பு, உதவிகளை எதிர்நோக்கியிருக்கிறேன்.