எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Thursday, January 13, 2011

வாயில்லா ஜீவன்கள் வாழ வழி உண்டா?

நண்பர் ஒருத்தர் என்கிட்ட வந்து, 'அண்ணன் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர்  மனைவியை விட்டு பிரிஞ்சு வாழ்ந்தார். குடிச்சு குடிச்சே இறந்திட்டாரு, பாவம். அவரோட‌ மூணு குழந்தைகளை பராமரிக்க ஆள் இல்லை. எதாவது அனாதை இல்லம் இருந்தா சொல்லுங்க'ன்னு சொன்னார். (என்னோட சம்பாத்தியம்னா இதுமாதிரி அனாதை இல்லங்கள், மற்றவர்க்கு உதவும் நல்ல மனிதர்கள்தான்.)
சரி சொல்றேன்னு சொன்னேன். அந்த ஹோம்ல பர்மிஷன் வாங்கிட்டு சொல்லிட்டேன். சென்னை கொட்டிவாக்கத்தில் அன்புக்கரங்கள் என்னும் அந்த இல்லத்தை லஷ்மி என்ற மேடம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு உறுதுணையாக சுரேஷ்குமார் என்பவர் இருந்து வருகிறார். இந்த இல்லத்துக்கு நான் பலமுறை சென்றிருக்கிறேன். அங்கே இருக்கும் ஒரு முதிய பெண்மணி நான் சென்றால் போதும், மிகுந்த பாசத்தோடு வரவேற்பார். இந்த இல்லத்தைப்பற்றி பல‌முறை பத்திரிகைகளில் எழுதியுள்ளேன். இதனால் என்மேல் அவர்களுக்கு கொஞ்சம் மரியாதை உண்டு. ஆக, அந்த குழந்தைகளை சேர்க்கும் பணி நடந்து வருகிறது.எதற்காக இதை இங்கே சொன்னேன் என்றால் நிர்க்கதியான மனிதர்களை சேர்க்க இல்லங்கள் இருக்கின்றன, ஆனால்நிர்க்கதியான வாயில்லா ஜீவன்களை பாதுகாக்க சரியான இல்லங்கள் இல்லாதது வேதனையளிக்கிறது.
என் மனதை பாதித்த சம்பவங்கள் இரண்டை இங்கே கூற விரும்புகிறேன்.  நான் வசிக்கும் பகுதியில் ஒரு நாய் 7 குட்டிகள் போட்டது. ஆனால் அவற்றின் தாய் எலும்பும், தோலுமாக காட்சியளிக்கிறது. இந்த சூழலில் அந்த நாய்களை பாதுகாக்கும் நோக்கத்தில் ப்ளூ கிராஸ் அமைப்பை தொடர்பு கொண்டேன். அவர்கள் கேட்ட கேள்வி நாய் குட்டி போட்டு 45 நாள் ஆகியிருக்கணும், அப்படியானால்தான் சேர்த்துக்கொள்வோம் என்றார்கள். இதனால் அந்த நாய்க்குட்டிகளை சேர்க்க முடியாமல்போனது. 10, 15நாள்களே நாய்க்குட்டிகள் அவை, பனி நேரம் என்பதால் அவை ஒவ்வொன்றாய் செத்துப்போயின. தினம் தினம் என் மனம் அதை நினைத்து கஷ்டப்படுகிறது. குற்றவாளிபோல் மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது.
கடந்த ஆண்டு இதே பனிக்காலம். நான் வசிக்கும் பகுதியில் நாய்க்குட்டி ஒன்றை யாரோ விட்டு விட்டு சென்றுவிட்டனர். அது அந்தப்பகுதியில் உள்ள கடை முன்னே தஞ்சம் புகுந்தது. கடைக்கு வருவோர், போவோர் பிஸ்கட், புரை என்று வாங்கிப்போடுவார்கள். அதை தின்று வளர்ந்தது. 3, 4 மாதங்கள் தாக்குப்பிடித்தது. ஒருநாள் ராத்திரிவேளையில் யாரோ டூவீலர் ஆசாமி அந்த வாயில்லா ஜீவனின் மீது மோதிச்சென்றுவிட்டார். இரவு முழுக்க வீல், வீல் என்று சத்தம். நான் வேறு எதோ நாய் கத்துகிறது என்று இருந்துவிட்டேன். காலையில் பார்த்தால், அந்த நாய்க்குட்டி. நகர முடியாமல் அங்குமிங்கும் உருண்டு புரண்டு சென்றது. உடம்பெல்லாம் மண். தண்ணீர் விட்டு கழுவினேன், சாப்பாடு வைத்தேன். ஆனால் அது சாப்பிடாமல் பசுவைத்தேடும் கன்றைப்போல் என்னிடம் வந்தது. என்னால் என்ன செய்ய முடியும். ப்ளூ கிராஸுக்கு போன் பண்ணினேன். வருகிறேன் என்றார்கள், நேரம் ஆனதால் நான் வேலைக்கு கிளம்பிவிட்டேன், கடைசியில் நண்பகல் 12 மணிக்கு போன் பண்ணி நாங்க அண்ணாநகர்கிட்ட வந்துட்டிருக்கோம், நாய் இருக்கா எப்பிடி? என்றார்கள். அதற்குள் வீட்டிலிருந்து எனக்கு தகவல் நாய் 11 மணி அளவில் செத்துவிட்டது, குப்பை அள்ளுகிறவர்கள் அந்த நேரம் வந்தார்கள். எடுத்துச்சென்றுவிட்டார்கள் என்று தகவல் வந்தது.
என்ன சொல்ல? நாய் செத்துவிட்டது என்றேன். வாயில்லா ஜீவன்களை காப்பாற்ற வழி இல்லையா? இருந்தால் சொல்லுங்கள், சேர்ந்து நற்பணியாற்றுவோம்.

0 comments :

Post a Comment