எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Monday, January 24, 2011

கொஞ்சம் விழித்தெழுங்கள்!

வணக்கம். 23.01.2011 ஞாயிற்றுக்கிழமை மதுரையில் என் உறவினர் வீட்டு திருமணம். சனிக்கிழமை ராத்திரி 9 மணிக்கு கோயம்பேட்டுல பஸ் ஏறி மறுநாள் காலைல 8.30 மணிக்கெல்லாம் மதுரை போய்ச்சேர்ந்தேன். போற வழியில சென்னை டூ  திருச்சிக்கு போன பஸ்சுல சுந்தர்.சி நடிச்ச‌ 'வாடா' படம் பார்த்தேன். அரைகுறை தூக்கத்தோட பார்த்தேன். கலெக்டர் வேடம் ஏற்று நடித்த சுந்தர்.சி அநியாயக்காரர்களை சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்குகிறார். அதேபோல் திருச்சி டூ மதுரை சென்ற‌ பஸ்சில் சூர்யாவோட சிங்கம் படம் பார்த்தேன். எஸ்.ஐ. யான சூர்யா தனி ஆளாக நின்று ரவுடிகளை  பந்தாடுவார். பார்க்கும்போது உணர்ச்சிவசப்பட்டேன். ஆனால் நிஜத்தில் அவர்களால் என்ன முடியும் என்று எல்லோருக்கும் தெரிந்த கதையே. அவர்களது மறுபக்கமும். குணாதிசயங்களும் வேறுமாதிரியாகவே இருக்கின்றன. காசைக்குடுத்துட்டு ஒரு சில மணி நேரங்கள் கற்பனை உலகில் வாழ்ந்துவிட்டு நாமும் பழையபடி அவரவர் வேலையை செய்துகொண்டிருக்கிறோம்.
இந்தியன் கமல், ரமணா விஜயகாந்த், முதல்வன் அர்ஜூன், அந்நியன் விக்ரம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்களெல்லாம் நடிகர்கள், ஏதோ நடித்துவிட்டுப்போனார்கள் அவ்வளவுதானே? ஆனால் இப்போது நம்ம அண்ணன் விஜயகாந்த் அரசியல்ல குதிச்சிருக்கார். வரவேற்கலாம், ஆனால் ஆரம்பமே ஆட்டம் காணுதே... ரவுடிகளும், மெஜாரிட்டி சாதியைச்சேர்ந்தவர்களே பெரும்பாலும் அவரது கட்சியில் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி நல்லாட்சி நடத்துவார்கள். விஜயகாந்த் சிந்திக்க வேண்டும். நான் இங்கே சொல்லும் கருத்து நிச்சயம் அவரை எட்டப்போவதில்லை, ஆனால் அரசல் புரசலாக எனது இதே கருத்தை ஏற்கனவே பலர் வேறு வேறு தளங்களில் சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்ததாக. விஜயகாந்த் ஒரு சுத்த தமிழன் அல்ல. அவர் சார்ந்த சாதியின் அடிப்படையில் பார்த்தால் அவரது தாய்மொழி தெலுங்கு. இதை நம் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை. ஆனால் ஆரம்பமே சரியில்லை என்றால் தாக்குப்பிடிப்பது எப்படி? இது ஒரு தனிக்கதை.
அநீதிகளை தட்டிக்கேட்கும் மனப்பக்குவம் ஏன் நம்மில் பெரும்பாலானோருக்கு இல்லை. சிங்கம் சூர்யாவைப்போல, சாமி விக்ரமைப்போல எத்தனைபேர் இருக்கிறார்கள். விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் தொடருவதில்லை. பல்வேறு தரப்புகளில் இருந்து மிரட்டல்கள் வரும்போது ஒதுங்கிக்கொள்கிறார்கள். அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாக மாறி அவர்கள் தங்களை பொருளாதாரத்தில் வளப்படுத்திக்கொள்கிறார்கள். சிலர் மட்டும்  மவுனிகளாக இருந்துவிடுகிறார்கள்.
பொதுவாகவே தவறுகளை தட்டிக்கேட்கும் மனப்பாங்கு நம்மில் பெரும்பாலானோருக்கு இல்லாததால்தான் ஆளாளுக்கு ஆட்டம் போடுகிறார்கள். காய்கறி விலையும் பெட்ரோல் விலையும் தாறுமாறாக ஏறிக்கொண்டே போகிறது. பெயருக்கு சில அரசியல்வா(வியா)திகள் அறிக்கை விடுகிறார்கள் அவ்வளவுதான். எத்தனை அமைப்புகள் இருக்கின்றன. ஏன் யாருக்குமே போராட்டக்குணம் இல்லாமல் போனது? மேடைகளில் வாய் கிழிய பேசுவோர் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இந்த  விண்ணை முட்டும் விலைவாசி ஏற்றம் நாளை ஒருநாள் இங்கேயும் சோமாலியக்குழந்தைகள் உருவாகும் வாய்ப்பு ஏற்படலாம். அப்படியொரு நிலை வர காரணமாக இருந்து விடுகிறார்கள்.  என் கல்லூரிப்படிப்பை முடித்ததும் என் கிராமத்தில் நான் ஒரு அமைப்பை தொடங்கினேன். அதுபற்றி அடுத்த சந்திப்பில் சொல்கிறேன்.

0 comments :

Post a Comment